"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 2

நண்பர்களே!

ஐரோப்பாவிலிருந்து 24 மணிநேர தமிழ்ஒலிபரப்புச் சேவையினை வழங்கிவரும், ஐரோப்பியத் தமிழ் வானொலி யில், கானம் கலைக்கூடத்தின் தயாரிப்பில், '' இணையத்தில் இன்பத்தமிழ் '' எனும் வாரந்தர நிகழ்ச்சியொன்றை சென்ற வாரத்திலிருந்து, தயாரித்து வழங்கத் தொடங்கியுள்ளதை சென்றவாரத்தில் உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.

இந்த வார நிகழ்ச்சியில், இணையத்தில் இன்பத்தமிழ் பற்றிய மேலதிக குறிப்புக்களுடன்,
இணையத்தில் நல்ல பல பதிவுகளையும், இணையத் தொழில் நுட்பம் குறித்த நல்ல பல தகவல்களை, அழகு தமிழில் எளிமையுறப் பதிவு செய்து வரும், தமிழ்மணத்தின் இவ்வார நட்சத்திரமாகிய சிந்தா நதி அவர்களுடைய தொழில்நுட்பம் குறித்த சிறு செவ்வி, பதிவர் மதி-கந்தசாமி அவர்கள் குரற்பதிவாகப் பதிவு செய்த, ஈழத்துக் கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவிதைப்பாடல் என்பன உள்ளடங்கி வருகின்றது. செவ்வியளித்த சிந்தாநதி அவர்களுக்கும், பதிவர் மதி-கந்தசாமி அவர்களுக்கும், மனமார்ந்த நன்றிகள்.

நண்பர்களே! கேட்டுச் சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களை.

இந்நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்குரிய ஒலிப்பதிவினை இங்கே கேட்கலாம்.இணையத்தில் இன்பத்தமிழ் 2


நண்பர்களே! இந்த ஒலிச்செயலி இயங்காவிட்டால், மேலேயுள்ள செயலியில் கேட்கலாம்.

Posted byமலைநாடான் at 7 comments  

இணையத்தில் இன்பத்தமிழ் 1

நண்பர்களே!

புத்தாண்டில் ஒரு புதிய முயற்சி. புதிய முயற்சி என்று சொல்லலாமோ எனத் தெரியவில்லை. ஆனாலும் எடுத்துக்கொண்ட விடயத்தினடிப்படையில் புதிய முயற்சி எனச் சொல்கின்றேன். புதிர் போதும்...


..விடயம் இதுதான். ஐரோப்பாவிலிருந்து 24 மணிநேர தமிழ்ஒலிபரப்புச் சேவையினை வழங்கிவரும், ஐரோப்பியத் தமிழ் வானொலி யில், கானம் கலைக்கூடத்தின் தயாரிப்பில், '' இணையத்தில் இன்பத்தமிழ் '' எனும் வாரந்தர நிகழ்ச்சியொன்றைத் தயாரித்து வழங்கத் தொடங்கியுள்ளேன்.


பிரதி ஞாயிறு தோறும் ஐரோப்பிய நேரம் மாலை 19.30 மணிக்கு, இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இவ்வொலிபரப்பினை செய்மதியூடாக ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், பண்பலை வரிசைகளில், கனடாவில் ரொறன்ரொவிலும், மொன்றியலிலும், இணையவழியாக உலகம் முழுவதிலும் இவ்வொலிபரப்பினைக் கேட்கலாம்.


இந்நிகழ்ச்சியில், இணையப்பரப்பில் தமிழ்கூறு நல்லுலகம் சார்ந்த படைப்பாளர்கள், பதிவாளர்கள் பலரதும் , நல்ல படைப்புக்களை, எழுத்துக்களை, ஒலிவடிவமாக்கி வான்பரப்பில் தவழவிட முனைகின்றேன்.
அந்த வகையில் தமிழ்மணத்தில் வலைப்பதியும், சகநண்பர்கள் சிலரது படைப்புக்களை நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ள அனுமதி கேட்டபோது, மகிழ்ச்சியோடு சம்மதித்துள்ளார்கள். மேலும் சிலரிடம் கேட்கவுள்ளேன். அவ்வப்போது நல்ல கருத்துக்கள், சிந்தனைகள் தாங்கி வரும் படைப்புக்களை இனைத்துக்கொள்ள எண்ணியுள்ளேன். அத்தருணங்களில் நிச்சயம் படைப்புக்களைப் பதிவு செய்த நண்பர்களிடத்தில் தொடர்புகொண்டு அனுமதி பெற்றுக் கொள்வேன்.


இந்நிகழ்ச்சி மூலம், வலைப்பதிவுலகுக்கும் அப்பால் உள்ள தமிழ்மக்களிடத்தில், இணையப்பதிவுகளில் உலாவரும் சிறப்பான கருத்துக்களை கொண்டு செல்லலாம். நிகழ்சிகளின்போது வலைப்பதிவுகள் பற்றித் தெரியப்படுத்துவதன் மூலம், மேலும் பல புதியவர்கள் வலைப்பதிவுகள் பற்றி அறியவும், பதியவும், கூடும் என்றும் எண்ணுகின்றேன்.

முதலாவது நிகழ்ச்சி இன்று 21.01.07 ஞாயிறு மாலை ஒலிபரப்பானது. சென்ற வருடத்தில் இங்கே நான் பதிவு செய்த ஒரு பாடல்பதிவுடனும், நண்பர் வசந்தனின் ஒரு குரற்பதிவுடனும், இந்த முதலாவது நிகழ்ச்சி அமைந்தது. முதலாவது நிகழ்ச்சியில் இருக்கக்கூடிய குறைகள் சிலவற்றுடன், ஒலிபரப் பான அந்நிகழ்ச்சியின் ஒலிப்பதிவினை கீழேயுள்ள செயலியில், கேட்கலாம்.


நண்பர்களே! ஒலிப்பதிவினைக் கேட்டு, உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்கள் நிகழ்ச்சியை மேலும் செழுமைப்படுத்துமென்று நம்புகின்றேன்... செய்வீர்களா?

Inpaththamil 1.wma

Posted byமலைநாடான் at 0 comments  

வணக்கம்!

வணக்கம் நண்பர்களே!

எனது மற்றுமொரு புதிய வலைப்பூ, நெய்தற்கரை. ஈழத்தின் நெய்தற்கரையொன்றில் பிறந்தவன் நான். அந்த நெய்தல் நிலத்தின் நினைவாக இந்தப்பூவிற்கு இந்தப் பெயரை இட்டுள்ளேன். இதிலே என் ஒலி, ஒளிப்பதிவுகளை இடுவதாக எண்ணியுள்ளேன். என் ஏனைய வலைப்பூக்களுக்கும், பதிவுகளுக்கும், வந்து ரசித்து, கருத்துச் சொல்லிவருவது போல், இந்தக் கரைக்கும் வந்து கதைசெர்லிச் செல்லுங்கள்.

நன்றி!

Posted byமலைநாடான் at 10 comments