"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

என்னினமே என்சனமே! என்னை உனக்கு தெரிகிறதா?

"...சிவபதமளித்த செல்வமே சிவபெருமானே..." எனும் ஒருவாசகத்துக்கும் உருகாதார் கூட உருகிப்போகும் திருவாசகவரிகளை, உச்சரிப்புச் சுத்தமாய், ஊனுருகப் பாடும் அந்த மனிதனை, அவர் இசையின் கரைதலில் கசிந்து கண்ணீர் மல்கும் மனிதர்களை, வேடிக்கை பார்க்கும் என் பாலகப் பருவத்தில் அறிமுகமான அந்த அற்புதமான ஈழத்து இசைக்கலைஞன்தான் பொன். சுந்தரலிங்கம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், பின்னாட்களில் யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தார். ஈழத்தின் பல இசைமேடைகளிலும், கோவில்களிலும் ஒலித்த அந்த வெண்கலக்குரலோன், இலங்கை வானொலி புகழ் இசைக்கலைஞராக அறியப்பட்டிருந்த போதும், மக்கள் கலைஞனாக பலரது மனங்களிலும் இடம்பிடித்துக்கொண்டதென்னவோ " இந்த மண் எங்களின் சொந்த மண்.." பாடலைப் பாடியதன்பின்தான். இந்தப்பாடல் பின்னர் மற்றுமொரு ஈழத்துப்பாடகர் சாந்தனாலும் பாடப்பெற்று இறுவட்டாக வந்தததென நினைக்கின்றேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கென ஒரு அடையாளத்தைத் தந்தது, " என்னினமே என் சனமே, என்னை உனக்குத் தெரிகிறதா? .." எனும் இப்பாடல்தான் என, ஒரு வானொலிச் செவ்விக்காக சந்திந்தபோது என்னிடம் கூறியிருந்தார். அந்தப்பாடலையும், இன்றைய ஈழச்சூழலைச் சுட்டும் பாடலையும், சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற, ஒரு வயலின் மிருதங்க அரங்கேற்ற நிகழ்வில் பாடிய காட்சிதனை (ஏற்கனவே வன்னியனின் ஈழத்துப்பாடல்கள் தளத்தில் ஒலி வடிவாகத் தந்திருந்தபோதும்) ஒளிப்பதிவாகப் பதிவ செய்கின்றேன்.

இது தமிழ்த்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியிலிருந்து பதிவு செய்யப்பட்டது. அரங்கேற்றம் செய்யும் செல்வன்கள் கூட புலம்பெயர் சூழலில் ஈழத்தின் இளைய தலைமுறையின் கலையார்வத்துக்கும், தமிழபற்றுக்குமான நல் எடுத்துகாட்டாகக் சொல்ல முடியும். இந்நிகழ்ச்சியோடு தொடர்புடைய அனைவர்க்கும் நன்றி கூறி, மற்றுமொரு ஈழத்துக் கலைஞனின் கலைத்துவத்தை மனநிறைவோடு பதிவு செய்கின்றேன்.



Posted byமலைநாடான் at காலை 6:24   

6 comments:

த.அகிலன் said... ஆகஸ்ட் 7, 2007 at காலை 11:16   

//மக்கள் கலைஞனாக பலரது மனங்களிலும் இடம்பிடித்துக்கொண்டதென்னவோ " இந்த மண் எங்களின் சொந்த மண்.." பாடலைப் பாடியதன்பின்தான். இந்தப்பாடல் பின்னர் மற்றுமொரு ஈழத்துப்பாடகர் சாந்தனாலும் பாடப்பெற்று இறுவட்டாக வந்தததென நினைக்கின்றேன்.//

இது ஒரு புதிய தகவல்தான் மலைநாடன் அண்ணா. தகவலுக்கு நன்றி. மற்றபடி பொன்சுந்தரலிங்கத்தின் கணீர்க்குரலுக்கு நானும் ரசிகன் தான். கணீர்க்குரலில் சீர்காழி கோவிந்தராஜனுக்கு அடுத்தஇடம் என்மனசில் இவருக்குத்தான்.

G.Ragavan said... ஆகஸ்ட் 7, 2007 at இரவு 8:16   

ஆகா! பாரம்பரிய இசையிலும் தமிழ்ப் பாட்டு புரிகிறதே. பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் குரலும் பாவமும் அருமை. அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே ஒலி போய்விடுகிறதே. முழுமையான ஒலியோடு ஒளி இல்லையா?

வெற்றி said... ஆகஸ்ட் 8, 2007 at காலை 5:00   

மலை,
பாடலுக்கு நன்றி.
நண்பர் இராகவன் சொன்னது போல் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சத்தம் வரவில்லை.

Unknown said... ஆகஸ்ட் 8, 2007 at காலை 5:11   

3 நிமிடத்துக்கு அப்புறம் ஒலி வரலையே?
புரியுறமாதிரி ஒரு நல்ல தமிழ் பாட்டு. சீர்காழியின் கணீர் குரல்தான் ஞாபகம் வருகிறது!

கானா பிரபா said... ஆகஸ்ட் 8, 2007 at காலை 6:29   

சுந்தரலிங்கம் 90 களில் நாளும் ஒரு தமிழிசை நிகழ்ச்சி என்ற நிகழ்வை தான் கொண்டு நடாத்திய அரங்கில் நிகழ்த்தியவர். பல தடவை போய்ப் பார்த்து ரசித்திருக்கின்றேன். இவர் நல்லூர்க் கந்தனுக்கு கோயில் சார்பில் தேவார புராணம் ஒப்புவிக்கும் அடியார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. இவரின் சகோதரி பொன் சுபாஷ் சந்திரன் புகழ்பெற்ற மெல்லிசைப் பாடகர் என்பதும் குறிப்பிட வேண்டும்.

சாந்தன் பாடியது "இந்த மண் எங்களின் சொந்த மண்" இறுவட்டில் உள்ளது.

மலைநாடான் said... ஆகஸ்ட் 8, 2007 at மாலை 6:31   

நண்பர்களே!

ஒளிப்பதிவில் 3 நிமிடங்களின் பின் ஒலி வரவில்லை என்பதை நீங்கள் சொன்னதன் பின்தான் தெரிந்து கொண்டேன். விரைவில் திருத்தம் செய்து மீளவும் வலையேற்றுகின்றேன்.

நன்றி

Post a Comment